செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:59

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

Rate this item
(0 votes)

 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பிறை சமுதாயத்தை பிரிக்குமா?

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நாமெல்லாம் மிக ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் ஹிஜ்ரி 1432 ஆண்டின் ரமழான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் (3:19), உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். (5:3) என்று இஸ்லாத்திற்கு இறைவனே நற்சான்றிதழ் கொடுத்துவிட்டபோது இறைமார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களோ பிறையை மையமாக வைத்து சல்லடையாக பிரிந்து கிடக்கின்றனர், இல்லை பிரிக்கப்பட்டுள்ளனர்.

ஓர் இறை, ஓர் மறை, ஒரே பிறை ஆனால் பெருநாள் மட்டும் எப்படி மூன்று? என்று சகோதர சமுதாயத்தவர்கள் கூட வியக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. பிறையை வைத்து சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதையும் பிறைகளைப் பற்றிய அடிப்படை தகவல்களையும் மக்களுக்கு விளக்குவதே இப்பிரசுரத்தின் நோக்கம்.

தத்தம் பகுதி பிறை, ஊர்பிறை, மாவட்டபிறை, மாநில அளவு பிறை, சர்வதேச பிறை, பிறைபார்த்த தகவல் என்று அறிஞர்களின் பலவிதமான நிலைபாடுகளால் முஸ்லிம்கள் பிறை விஷயத்தில் பெரும் குழப்பத்தில்தான் உள்ளனர். காரணம் பிறை சம்பந்தமான குர்ஆன், ஹதீஸ், விஞ்ஞானம் முதலியவற்றை ஆராய்ந்ததாகவும் அதனடிப்படையில் தாங்கள் நிலைபாடுதான் சரியென்றும் ஆணித்தரமாக கூறும் அறிஞர்கள், உலக ஆதாயங்களுக்காக சில வருடங்களிலேயே தங்கள் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு நேர்எதிராக பேசுவதை கண்கூடாகக் காண்கிறோம்.

நம்மில் பெரும்பான்மையினருக்கு ஷஃபான் 29 வது நாள் அல்லது ரமழான் 29ல் தான் பிறைகளை பற்றிய சிந்தனை வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் பிறைபற்றிய அடிப்படை தகவல்களைக்கூட அறிய முற்படாதவர்கள் ரமழான் காலங்களில் பெரும் விஞ்ஞானிகளைப்போல பேசித் திரிவதையும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மஃரிபுக்குப்பின்னர் பிறை தெரிகிறதா என்று மேற்கு நோக்கி பார்ப்பதையும் வருடம்தோரும் நாம் பார்த்தே வருகிறோம். பின்னர் ரமழான் 2 வது, 3 வது நாட்களில் மஃரிபுக்கு பின்னர் தெரியும் வளர்பிறையை பார்த்துவிட்டு பிறை பெரிதாக அல்லவா தெரிகிறது, நாம் ஒரு நோன்பை விட்டுவிட்டோமே என்று அவர்கள் பரிதாபப்படுவது ஒவ்வொரு வருடமும் நாம் காணும் தொடர் காட்சியாகும்.

அவர்களிடம் இன்று ஷஃபான் / ரமழான் 29ம் நாள் என்று எதை வைத்து நீங்கள் முடிவு செய்தீர்கள்? இன்று 29வது நாள் என்றால் முந்தைய 28 நாட்களின் பிறைகளை நீங்கள் பார்த்து கணக்கிட்டு வந்தீர்களா? ஷஃபான் அல்லது ரமழான் 29ம் தினத்தில் மட்டும் பிறையை பார்க்கச் சொல்லி கட்டளையிட்டது யார்? அதுவும் 29 அல்லது 30 அன்று மேற்கு திசையில் பிறை தெரியும் என உங்களுக்கு யார் சொன்னது? என்று கேட்டுபாருங்கள். ஒன்று அவர்கள் மௌனமாக இருப்பார்கள் அல்லது உங்கள் மீது கோபப்படுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இறுதி நாட்களான 25 முதல் 29 வரை அதிகாலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு கிழக்கு நோக்கி பிறையை கவனிக்க வேண்டியவர்கள், தெரியாத பிறையை தேடிக்கொண்டு 29 அன்று மஃரிபு வேளையில் மேற்கு திசையை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டு நாம் என்ன சொல்வது?. இதை சுட்டிக்காட்டுவது அவர்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல.

 

மாறாக நம் சமுதாயத்தில் அறிஞர்களாக அடையாளம் காட்டப்பட்டவர்கள் பிறை விஷயத்தில் சரியான அக்கரை எடுத்துக் கொள்ளாததும், தன் சுய கருத்தை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, விருப்பு வெறுப்பின்றி குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் பிறை விஷயத்தை ஆய்வு செய்யாததின் விளைவுதான் என்பதை அறியத்தருகிறோம்.

முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறான நாட்களில் முதல் நோன்பை ஆரம்பிப்பதும், 3 வெவ்வேறான நாட்களில் பெருநாளை கொண்டாடுவதும் நம் சமுதாயத்தில் ஜீரணிக்கப்பட்டுவிட்ட ஒரு சம்பவமாக ஆகிவிட்டது. மார்க்க அறிஞர்கள் எனப்படுவோரிடம் இவ்வாறு தமிழக முஸ்லிம்கள் மூன்று நாட்களில் நோன்பையும், பெருநாட்களையும் அனுசரித்து வேறுபட்டு பிரிந்து கிடக்கின்றனரே என்று எவரும் கேட்டால் இதில் என்ன இருக்கின்றது? என்று துவங்கி தன்னுடைய சுய நிலைபாட்டை நியாயப்படுத்தி பேச ஆரம்பித்து விடுகின்றனர்.

இன்னும் ஒருபடி மேலேபோய் இவ்வாறு 3 வெவ்வேறான நாட்களில் தலைநோன்பை ஆரம்பிப்பதால் லைலத்துல் கத்ரு இரவும் 3 நாட்களில் வரும் சாத்தியம் உண்டோ என்று கேட்டால் ஆம் உண்டு, லைலத்துல் கத்ரு இரவு என்பது இறைவன் நமக்கு அளிக்கும் ஒரு பரிசுதான் என்றுகூட பதில் வருகிறது. எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைச் செய்யத் தொடரவேண்டாம் (17:36) போன்ற இறைவசனங்களை பற்றி இன்று யார்தான் கவலை படுகிறார்கள்?. இத்தகையவர்கள் பிறைவிஷயத்தில் தங்களுடைய தற்பெருமையும், சுயகருத்துக்களை திணிப்பதையும் விட்டுவிட்டு, அல்லாஹ்விற்காக திறந்த உள்ளத்தோடு சிந்திப்பதே நம் சமுதாயத்திற்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

ரமழான் முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என்று மூன்று நாட்களில் மக்கள் ஆரம்பிப்பதை முக்கிய பிரச்சனையாக கருதாமல் அதில் அலட்சியம் காட்டுபவர்கள் ஜூம்ஆ நாளான வெள்ளிக்கிழமை தொழும் ஜூம்ஆ தொழுகையையும் வெள்ளி, சனி, ஞாயிறு என்று மூன்று வெவ்வேறான நாட்களில் முஸ்லிம்கள் தொழலாம் என்று தீர்ப்பளிப்பார்களா? வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளில் 24 மணிநேரத்திற்குள் தொழுது முடிப்பதற்கு சாத்தியப்படும்போது, நோன்பையும் பெருநாளையும் இவ்வாறு ஒரு நாளின் 24 மணிநேரத்திற்குள் அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஏன் கடைபிடிக்க இயலாது? மக்களே சிந்திப்பீர்!

பிறை என்றவுடனேயே நம் அனைவரின் சிந்தனைக்கும் வருவது ஸூமு லி ருஃயதிஹி வ அஃப்திரு லி ருஃயதிஹி என்ற பிரபலமான ஹதீஸ்தான். ருஃயத் என்ற பதத்திற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் கூட பிறையை பார்த்து நோன்பு நோருங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று (ஒரு வாதத்திற்காக) 'புறக்கண்ணால் பிறையை பார்த்து' என்ற பொருளையே கொள்வோம்.

இதில் நாம் கேட்பது என்னவென்றால் ரமழான் மாதம் முழுவதும் மக்களுக்கு மேற்கண்ட நபிமொழியை போதிக்கும் மௌலவிகளில் எத்தனை பேர் பிறைகளை புறக்கண்ணால் பார்த்து வருகின்றனர்? தமிழகத்தில் எந்த பள்ளிவாயிலின் நிர்வாகிகள் பிறைபார்க்கும் விஷயத்தில் அக்கரை எடுத்துள்ளனர்? நம் மாநிலத்தின் எந்த டவுன்ஹாஜி ஒவ்வொரு மாதத்தின் பிறைகளையும் புறக்கண்ணால் பார்த்து அவதானித்து குறித்து வைத்துக்கொண்டு நாட்களை கணக்கிடுகிறார்? எந்த இஸ்லாமிய இயக்கத்தினர் இவ்விஷயத்தில் கவனத்தை எடுத்து வருடத்தில் தென்படும் அனைத்து பிறைகளையும் கண்காணித்து வருகின்றனர்? என்பதை நெஞ்சில் கைவைத்து அல்லாஹ்வுக்காக சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

ஏனெனில் ரமழான் மாதம் வந்துவிட்டால் பிறை அறிவிப்பு, அதனைத் தொடர்ந்து மக்களுக்குள் பிரச்சனைகள் என்று ஆரம்பித்து பெரும் குழப்பங்கள் உட்பட அடிதடி சண்டைகள் வரை நிகழ்வதற்கு மார்க்கம் படித்த மௌலவிகள், பள்ளிவாயிலின் நிர்வாகிகள், டவுன் ஹாஜிகள் மற்றும் இயக்கத் தலைவர்களில் சிலர்தானே முதல்காரணமாக இருக்கின்றனர். மேற்குறிப்பிட்டுள்ள நபர்கள் எவருக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. இருப்பினும் தமிழகத்தில் பிறை விஷயத்தில் மேற்கண்டவர்கள்தானே முஸ்லிம் மக்களை வழிநடத்துகின்றனர். பிறையை அவர்களே தொடர்ந்து பார்த்துவராமல் மற்றவர்களை நோக்கி பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் என்று உபதேசம் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது (61:2,3) என்ற இறைவசனத்தை இங்கு நினைவு படுத்துகிறோம். இனி பிறையை பார்த்து நோன்பு நோருங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என எவரும் உபதேசித்து தத்தம் பகுதி பிறை, ஊர்பிறை, மாவட்டபிறை, மாநில அளவு பிறை, சர்வதேச பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற நிலைபாடுகளில் ஏதேனும் ஒன்றை மக்களிடம் நிலைநிறுத்த கிளம்பினால் அவர்களிடம், இந்த மாதத்தில் எத்தனை பிறைகளை புறக்கண்ணால் நீங்கள் பார்த்தீர்கள்? இந்த மாதத்தின் முதல் பிறையை எந்த தேதியில் பார்த்தீர்கள்? என்று அவர்களை நோக்கி நீங்கள் கேள்வி எழுப்புங்கள். முதலில் நீங்கள் பிறைகளை தொடர்ந்து சரிவர பார்த்து கணக்கீடு செய்ய பழகிவிட்டு எங்களுக்கு உபதேசம் செய்ய முன்வாருங்கள் என்று அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

இன்னும் மக்களே! ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல! மிருகங்கள் பறவைகள் உட்பட உலக ஜீவராசிகள் அனைத்தும் தங்கள் நாளின் துவக்கத்தை காலை பொழுதில்தான் துவக்குகின்றன. ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் ஒரு நாளின் துவக்கம் சூரியன் மறைந்த பின் மஃரிபு வேளை என்று நம்பியுள்ளனர்.

யூதர்கள் அவர்கள் நாளை மஃரிபு வேளையில் துவங்குகிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் நாம் என்ன அறிவிழிகளா? ஒருநாளின் துவக்கம் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க யூதர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் கண்மூடி நம்புவது எந்த விதத்தில் நியாயம்?

குர்ஆன் கூறும் நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள் (2:238) என்ற கட்டளை பற்றி நபிகளாரிடம் நடுத்தொழுகை எது? என்று வினவப்பட்டபோது அது அஸர் தொழுகை என்றார்கள். தினம் நபிகளார் (ஸல்) அவர்களின் இறுதித் தொழுகை வித்ரு ஆக இருந்தது. ஆக ஒரு நாளின் நடுப்பகுதி அஸர் என்றும் இறுதிப்பகுதி இரவு என்றும் தெளிவாகிவிட்ட பின்னர் அந்த நாளின் ஆரம்பம் ஃபஜ்ரு வேளைதான் என்பதை புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் இருக்கின்றது? நபி (ஸல்) அவர்கள் தமது ரமழான் இஃதிகாஃபை ஃபஜ்ரு தொழுதுவிட்டு ஆரம்பித்தார்கள், பெருநாள் தினத்தின் ஃபஜ்ரு வேளையில்தான் இஃதிகாஃபை முடித்தார்கள்.

எனவே ஒரு நாள் என்பதின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை நபி (ஸல்) நடைமுறை படுத்திவிட்டு சென்றபிறகும்கூட முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மஃரிபிலிருந்து நாட்களை துவக்குவது துர்பாக்கிய நிலையில்லாமல் வேறென்ன?. எனவே மக்களே பிறை குழப்பத்தில் பெரும் பங்குவகிக்கும் ஒரு நாளின் ஆரம்ப நேரத்தை புரிந்துகொள்ளுங்கள். இரவு பகலை முந்தமுடியாது (36:40) என்ற இறைவசனத்திற்கேற்ப ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான், மஃரிபு அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் அந்தந்த நாட்களில் தென்படும் பிறை அந்த நாளுக்குரியது, அடுத்த நாளைக்குரியது அல்ல! இன்று நாம் மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளை தொழுகிறோம் என்றால் அந்த மஃரிபு தொழுகையும் இஷாத்தொழுகையும் இன்றைய தினத்தின் தொழுகைகளே அல்லாமல் நாளைய தினத்திற்குரிய தொழுகை அல்ல. ஆனால் இன்றைய தினத்தில் தொழும் மஃரிபு மற்றும் இஷா தொழுகைகளுக்கு மத்தியில் தென்படும் வளர்பிறையை இன்றைய மஃரிபு வேளையில் பார்த்துவிட்டு இது நாளைக்குரிய பிறை என்று தீர்மானிப்பது சரிதானா? முறைதானா?.

நபிகளார் (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளை பற்றி சொல்லும் போது ஃபஹூவ லி லைலத்தின் ராயித்துமூஹூ - நீங்கள் எந்த தினத்தில் பார்த்தீர்களோ அது அந்த தினத்தின் பிறை என்று தெளிவாக விளக்கியுள்ளதின் மூலம் நீங்கள் எந்த தினத்தில் பிறையை பார்;க்கின்றீர்களோ அது அந்த தினத்தின் நாளைதான் காட்டுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஒன்றாம் தேதி தோன்றும் பிறை ஒன்றாம் தேதிக்குரியது, திங்கட்கிழமை பார்க்கும் பிறை திங்கட்கிழமைக்குரியது. எனவே அந்தந்த நாளில் தென்படும்; பிறை அந்த நாளுக்குரியது, அடுத்த நாளைக்குரியது அல்ல என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து கணக்கிட்டு வரவேண்டும்! பிறைகளை பற்றி திருமறை குர்ஆன் கூறும்போது, நபியே! தேய்ந்து வளரும் பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (2:189). இன்னும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.(36:39) என்கின்றது.

நம் காலத்தை, தேதியை பிறை காட்டுகிறது என்றால், இன்னும் அதன் இறுதி வடிவம் பழைய பேரீத்த மட்டையைப்போல் இருக்குமென்றால் பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாம் தினமும் கவனித்தால்தானே அறியமுடியும். ஒரு வருடத்தில் ஷஃபான் மற்றும் ரமழான் 29 ம் நாட்களில் மட்டும் பிறையை பார்க்காமல் பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் பார்த்து கணக்கிட்டு வரவேண்டும், அவதானிக்க வேண்டும் என்பதைதான் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

உலக முஸ்லிம்கள் ரமழானையும், பெருநாட்களையும் ஒரே தினத்தில் அனுசரிக்க இயலும். பிறையால் சமுதாயத்தில் எந்த குழப்பமும் வர வாய்ப்பில்லை. சிந்திக்காமல் இஸ்லாமிய தலைவர்களை கண்மூடி பின்பற்றும் சில மனிதர்கள் தாம் சக மக்களை குழப்புகின்றனர். ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் நாம் தொடர்ந்து பிறைகளை பார்த்து வருகையில் மேற்காணும் 36:39 இறைவசனம் கூறும் உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் 29 அன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் தென்படும். அதற்கு அடுத்தநாள் 30ம்நாள் அம்மாவாசையாகும், பிறையை பார்க்க இயலாது. அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் வளர்பிறை மேற்கில் தெரியும்.

அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால், 28ம் நாள் அன்று உர்ஜூஃனில் கதீம் , 29ம் நாளில் அம்மாவாசை ஏற்படும், (கண்களுக்கு பிறை மறைக்கப்படும் நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறிய நாள்) அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் ஆகும்.

இவ்வாறாக பிறைகளின் அனைத்து மன்ஸில்களையும் கவனமாக பார்த்து விஞ்ஞானம் கூறும் துல்லிய கணக்கீட்டின் அடிப்படையில் நாம் பின்பற்றிவந்தால் ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக் கிழமைக்குள் தொழுது முடிப்பதை போல உலக முஸ்லிம்கள் அனைவரும் ரமழானையும், நோன்பு ஹஜ் பெருநாள் தொழுகைகளையும் ஒரே தினத்தில் அனுசரிக்க இயலும். இவ்வாறு ஒற்றுமையுடன் செயல்படுவதை கிருஸ்தவர்களின் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு ஒப்பிட்டு கொச்சைபடுத்தும் பிரிவினைவாதிகளை அலட்சியம் செய்துவிட்டு பிறைவிஷயத்தில் உலக முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடுமாறு உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

பிறைகளை துல்லியமாக கணக்கிடுதலை (Calculation), கணிப்பு (Guess) என்று திரித்து கூறி மக்களை பிரித்தாழ்பவர்கள்  இனியாவது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும்.

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை... (அல்-குர்ஆன் 6:159)

அல்லாஹ்வின் பேருதவியால் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் பல ஆண்டு காலமாக பிறைகளை புறக்கண்ணால் பார்த்து அவதானித்து, குறிப்பெடுத்து, குறித்து வைத்துக்கொண்டு, கணிணியின் துணைகொண்டு பிறைகளை துல்லியமாக கணக்கிட்டு வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ். ஹிஜ்ரி 1432ன் ரமழான் மற்றும் நோன்பு பெருநாளின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சூரியனின் சுழற்சியை எவ்வாறு துல்லியமாக கணக்கிட்டு நேரங்களாக நாம் பின்பற்றுகிறோமோ, அதைபோல சந்திரனின் சுழற்சியையும் மிகச்சரியாக கணக்கிட்டு தலைப்பிறை, பௌர்ணமி, அம்மாவாசை, கிரகணம் உள்ளிட்ட வற்றை எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய காலத்தில் நாம் வாழ்கிறோம்.

திருக்குர்ஆனின் வசனமான இன்னும் அவனே இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான். வானில் தத்தமக்குரிய வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.(21:33) என்பதை மெய்பிக்கும் வகையில் சூரியனும் சந்திரனும் மிகத்துல்லியமாக அவைகளின் பாதையில் சுழன்று வருவதை அறிந்து அல்லாஹ்வின் வல்லமையை புகழ்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

ஹிஜ்ரி 1432ன் ஷஃபான் மாதம் சனிக்கிழமை (CE 02-07-2011) அன்று துவங்கியது. ஷஃபான் மாதம் சனிக்கிழமை (CE 30-07-2011) அன்று 29 நாட்களில் அம்மாவாசையோடு முடிவடைகிறது.

இவ்வருடத்தின் ரமழான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (CE 31-07-2011) அன்று துவங்குகின்றது. எனவே அன்று முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு பிடித்திருக்க வேண்டும். ரமழான் மாதம் திங்கட்கிழமை (CE 29-08-2011) அன்று 30 நாட்களில் அம்மாவாசையோடு முடிவடைகிறது.

செவ்வாய்க்கிழமை (CE 30-08-2011) அன்று ஹிஜ்ரி 1432ன் ஈகைத்திருநாள் எனப்படும் நோன்புப் பெருநாளாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் உங்கள் அமல்களை செய்வதுதான் சரியானது என்பதை புறக்கண்ணால் பிறையை பார்த்து கணக்கிடுபவர்கள் கூட இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதுதான் என்பதை இந்திய ஹிஜ்ரி கமிட்டி இத்தருணத்தில் உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்கிறது.எனவே சரியான தினத்தில் அமல்களை செய்து அல்லாஹ்வின் திருப்தியை பெற முயற்சிப்போம்.

 

இவண்

HIJRI COMMITTEE OF INDIA,

160/101, North Main Road, Eruvadi, Tirunelveli, TamilNadu: 627103,

Phone: 0091 4637 241200, cell: 9962622000, 9962633000, and 9962644000.

    Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., www.hijricalendar.com, www.lunarcalendar.in, www.mooncalendar.in

Read 2510 times